தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள மதி அனுபவ அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் இன்று (13.03.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் இயங்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமும் போற்றிப் புகழ்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மகளிருக்கான திருவிழா போன்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.
இங்கே வந்திருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளுக்கும் முதலில் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே பல்வேறு சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டிய அத்தனை சகோதரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களை புகழ்ந்து பேசுவதும், வாழ்த்து சொல்றதும் மட்டுமே உண்மையான மகளிர் தின கொண்டாட்டமா நிச்சயமாக அமையாது. உங்களுக்கான அந்த பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வது தான், உண்மையான, மகளிர் தின கொண்டாட்டம். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் தான் இங்கே நடக்ககக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சி.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் பெண்களுக்கு உரிமை கொடுக்கணும்னு சொல்றீங்களே, அவங்களுக்கு என்னென்ன உரிமை கொடுக்கணும்னு கேட்டாங்க. அதுக்கு பெரியார் அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காம சொன்ன பதில், ஒரு ஆணுக்கு என்னெல்லாம் உரிமை இருக்கின்றதோ அந்த உரிமையெல்லாம் பெண்ணுக்கும் இருக்கணும்னு சொன்னார். அது தான் உண்மையான பெண்ணுரிமைன்னு தந்தை பெரியார் உணர்ந்தார்.
இது தான் நம்முடைய திராவிட இயக்கத்தோட கொள்கை. அதனால தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தொடர்ந்து திட்டங்களாக செயல்படுத்தி வருகின்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி வைத்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் போட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல தமிழ்நாடு காவல்துறையில் முதன்முறையாக பெண் காவலர்களை நியமித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இப்படி அவருடைய சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைக்கு கலைஞர் அவர்களோட வழியில நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான திட்டங்களை பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திராவிட மாடல் அரசு, எல்லா வகையிலும் பெண்களுடைய முன்னேற்றத்துக்காக தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றது
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் கையெழுத்தே, பெண்களுக்கான கையெழுத்து. அதுதான் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். அடுத்ததாக அரசுப்பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகள் உயர்கல்வி படிக்க சேர்ந்தால், அவங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தானர்கள்.
இன்றைக்கு மகளிர் காலையில எழுந்ததும் காலை உணவு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று பள்ளிகளில் முதலமைச்சருடைய காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கின்றார்கள்.
மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் உங்க மூலமா தான் இந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது என்றால் அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட உத்தரவு தான் காரணம்.
உங்க மூலமா செயல்படுத்தப்படுவதால தான் இன்றைக்கு காலை உணவுத்திட்டம் மிகப்பெரிய வெற்றித் திட்டமா, மற்ற மாநிலங்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு திட்டமாக, இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது
அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கின்ற வகையில கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து கொண்டு இருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
இந்த வரிசையில் தான், இன்றைக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 3000 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்க இருக்கிறார்கள். அதுமட்டுமில்ல, முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு குழு உறுப்பினர்களுக்கு I.D. Cards-ஐ தர இருக்கிறார்கள்.
கடந்த 4 வருஷத்துல மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கின்றது. நீங்கள், உங்களுடைய பொருளாதாரத்துக்காக குடும்பத்துல இருக்கிறவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாதுன்னு தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.
இந்த வங்கிக்கடன் இணைப்பை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழு சகோதரிகள் உங்கள் உழைப்பின் மீது, வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாக தான் முதலமைச்சர் அவர்கள் இதை பார்க்கின்றார்கள்
நேற்று முன் தினம் நான் திருவாரூர் மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு பழவனக்குடிங்கிற கிராமத்துல சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை சந்தித்து பேசினேன். அப்போது, அந்த குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அவர்களுடைய குழுக்கள் மூலமாக கிடைச்சிருக்கக்கூடிய பலன்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார்கள். மேலும், குழுக்களை இன்னும் எப்படி சிறப்பா முன்னேற்றலாம்னு ஆலோசனைகளையும் குழு சகோதரிகள் சொன்னார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த குழுவைச் சேர்ந்த சகோதரி கவிதா தன்னுடைய கைப்பட ஒரு லெட்டரை பாராட்டுக் கடிதத்தை நம்முடைய முதலமைச்சருக்கு எழுதி கொடுத்திருந்தாங்க. அதுல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், நம்முடைய முதலமைச்சர் அவர்களையும் பாராட்டி அவரோட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாங்க.
அதுமட்டுமில்ல, அந்தக் கூட்டத்துக்கு வந்த மகளிர் சிலர் குடியிருக்க முறையான வீடு இல்லன்னு கோரிக்கை வச்சாங்க. சிலர் வீட்டுமனைப் பட்டா இல்லன்னு குறைகளை சொன்னாங்க. அதையெல்லாம் எங்கள் துறையை சார்ந்த நாங்கள் அனைவரும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்துக்கு எடுத்துட்டு போனோம்.
உடனே அந்தப் பெண்களுக்கு வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகளையும் உடனே வழங்கச் சொல்லி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவு போட்டாங்க. அதன்படி, கோரிக்கை வச்ச 6 மணி நேரத்துலயே, அந்த மகளிரோட கோரிக்கைகளை நாங்க நிறைவேற்றி கொடுத்தோம்.
குறிப்பாக, கோரிக்கைகளை முன் வைத்த ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கலைஞர் கனவு இல்லம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை நானே அவர்களது கைகளில் கொடுத்துட்டு வந்தேன்.
அந்த ஆணைகளை வாங்குனதும், அவர்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஏழை – எளிய மகளிரோட இந்த மகிழ்ச்சிக்குப் பேரு தான் திராவிட மாடல் அரசு.
எனவே, நம்முடைய மகளிர் நீங்கள் கேட்கின்ற அத்தனை திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். இனியும் நீங்கள் கேட்க போகின்ற திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களும், திராவிட மாடல் அரசும், நம்முடைய துறையும், என்றென்றெக்கும் உங்களுக்கு ஆதரவா இருப்போம். அதே மாதிரி இந்த அரசுக்கும், நம்முடைய முதலமைச்சருக்கும் நீங்கள் எப்போதும் ஆதரவா இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வங்கிக்கடன் இணைப்புகளைப் பெற்ற அத்தனை மகளிருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.1.2025) தலைமைச் செயலகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், உருவாக்கப்பட்டுள்ள “மின்மதி 2.0” கைபேசி செயலியை தொடங்கி வைத்து, புதிய வடிவமைப்பு மற்றும் மக்களை கவரும் உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் இதழினை வெளியிட்டார்.
பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையிலான திராவிட மாடல் அரசினால் ஏற்றம் பெற்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான அடிப்படைப் பயிற்சிகள் நேரடியாக சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத்திறனையும், நிதி மேலாண்மை திறனையும் மேம்படுத்துவதற்காக மின்கற்றல் தள (e-Learning platform) அடிப்படையில் ‘’மின்மதி 2.0” கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் உரிய பயிற்சிகளை கேட்பொலி மற்றும் காணொளி வழியாக வழங்கப்பட உள்ளது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக தங்களுடைய கைபேசி மூலம் பல்வேறு தலைப்புகளில் தேவையான தகவல்களைக் காணவும், கற்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமுதாய வளப் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் இந்த செயலி மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளதுடன், தேர்வானவர்களுக்கு மின் சான்றிதழ் (E-Certificate) வழங்கும் வகையில் “மின்மதி 2.0” கைபேசி செயலி அமைக்கப்பட்டுள்ளது.
“மின்மதி 2.0” கைபேசி செயலியானது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் தனித்தனியாக செயல்படுத்தப்பட்டு வந்த மென்பொருட்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மின்னணு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தெரிவிக்க முற்றம் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் மாதந்தோறும் சிறந்த முறையில் வெளியிடப்பட்டு வருகிறது. முதலில் 10,000 பிரதிகளுடன் வெளியிடப்பட்டு வந்த முற்றம் மாத இதழ் தற்போது சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ளது.
சுய உதவிக் குழு மகளிரை மட்டுமே வாசகராகக் கொண்டுள்ள முற்றம் இதழானது, அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் இதழாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில், முற்றம் இதழை புதிய பொலிவுடனும், சிறந்த வடிவமைப்புடனும், அனைத்துத் தரப்பினரும் விரும்பும் பயனுள்ள செய்திகளை உள்ளடக்கிய இதழாக வெளியிடச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது புதிய பொலிவுடனும், நேர்த்தியான வடிவமைப்புடனும், பயனுள்ள செய்திகள், மக்களைக் கவரும் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்ட இதழாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2024) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் மளிகை பொருட்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ”மதி” என்ற வணிக முத்திரையுடன் ஒரே மாதிரியான வண்ண உறையில் விற்பனை செய்திட அறிமுகப்படுத்தினார்.
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து சரஸ் (SARAS - Sale of Articles of Rural Artisans Society) எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் ஆந்திரா மாநிலத்தின் அழகிய மரச் சிற்பங்கள், தெலுங்கானா மாநிலத்தின் கலம்காரி பைகள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், பீகார் மாநிலத்தின் மதுபாணி ஓவியங்கள், மகாராஷ்ட்ரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள், மற்றும் சணல் பைகள், மேற்கு வங்காளத்தின் செயற்கை பூ கைவினைப் பொருட்கள், பாண்டிச்சேரி மாநிலத்தின் மூலிகைப் பொருட்கள் மற்றும் சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள், திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி), விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், அலங்கார விளக்கு திரைகள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் பாரம்பரிய சுவை மிகுந்த உணவுப் பொருட்கள் மற்றும் தமிழ்நாட்டின் கிராமிய சுவை நிறைந்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்திட 10 அரங்குகள் உள்பட மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுவினர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் இன்று (21.09.2024) துவக்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
21.09.2024 முதல் 06.10.2024 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தி 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இத்தகைய சிறப்பு மிக்க விற்பனைக் கண்காட்சியை அனைவரும் கண்டு களித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.o மூலமாக TN-RISE (Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler) நிறுவனத்தை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
< p>மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் முன்னேற்றம் அடையாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சி பெற முடியாது. எனவே தான், பெண்களை எல்லா வகையிலும் முன்னேற்றும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக, கிராமங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றம் என்பது மிக முக்கியமானது. கிராமங்களில் இருக்கிற பெண்களும் பெரிய தொழில் முனைவோராக வளர வேண்டும் என்பது நம் முதலமைச்சர் அவர்களின் உயரிய நோக்கமாக உள்ளது. பெண் தொழில் முனைவோர், நிதி, சந்தைகள், தொழில் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை எளிதாக பெறுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதை உணர்ந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த தடைகளை போக்கும் வகையில், பிரத்யேக “புத்தொழில் இயக்கம்” ஒன்றை நம் திராவிட மாடல் அரசு உருவாக்கும் எனவும் - அந்த இயக்கம் மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான மேம்பட்ட உதவிகளை வழங்கும்” எனவும் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
பெண்ணுரிமை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு யாருமே சிந்திக்காத காலகட்டத்தில் சிந்தித்தவர் தந்தை பெரியார்
நான் பல நிகழ்ச்சிகளில் சொன்னதுண்டு. பெண்கள் இரண்டு விதமாக அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒன்று, பண்பாட்டு ரீதியாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், பொருளாதார ரீதியாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு பெண்கள் பொருளாதார விடுதலை அடைவதற்கு உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பேருதவி புரிவதை போல், பண்பாட்டு தளத்தில் பெண்கள் விடுதலை அடைவதற்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திராவிட இயக்கம் – திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த போது தான், பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை தந்தார்கள். அதே போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் போன்ற முற்போக்கான சட்டங்களை தந்தார்கள்.
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம், 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்குகிற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற மகளிர் வளர்ச்சிக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.
விளிம்புநிலையில் இருக்கக் கூடிய மக்களை முன்னேற்றுவதற்காக கழக அரசு பல்வேறு திட்டங்களைப் பார்த்து-பார்த்து நிறைவேற்றி வருகிறது. அந்த வழியிலே தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுயஉதவிக் குழுக்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்கள்.
இன்றைக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பல்கிப்பெருகி லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் நம்பிக்கை தருவதாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி, அதன் பயனை தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள சிறுகிராமத்தில் உள்ள பெண்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக "வாழ்ந்து காட்டுவோம் 2.0" திட்டமானது கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்து வருகிறது.
மகளிர் வேலைக்குச் செல்கிறார்கள் என்ற நிலையை, மகளிர் 4 பேருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்று மாற்றிட அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் பயனாகத்தான் இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவீதம் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வெற்றிப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை இப்போது தொடங்கியிருக்கிறது. தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இந்த நிறுவனம் இருக்கும்.
தொழில் செய்வதற்கு ஏற்ற தேவையான நவீன கட்டமைப்பு, உற்பத்தி மேம்பாடு, பேக்கிங், பிராண்டிங், மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை, நிறுவன உருவாக்கம், நிறுவன செயல்பாடு என மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகளை A to Z வழங்குவதற்காக தான் இந்த TN-RISE நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து உயர்தர சேவைகளை பெற, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 126 மகளிர் தொழில் முனைவோர்களும், 80 மகளிர் தொழிற்குழு நிறுவனங்களும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்திட இந்த நிறுவனத்தின் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நூற்றுக்கணக்கான மகளிர் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் தொழிற்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற இருக்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தகைய தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும், தேவையான உதவிகளை வழங்கவும் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு நிறுவனங்களுடன் இம்மையம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கி அவர்களை இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கும் முயற்சில் “TN-RISE" நிறுவனம் இன்று முதல் அர்ப்பணிப்புடன் செயல்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக மகளிர் தொழில் முனைவோர்களும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள் என்கிற வரலாற்று சாதனையை எட்ட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.
எனவே, TN-RISE-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டு மகளிர் தங்களுடைய தொழில் முனைவோராகும் கனவை நனவாக்கிக் கொள்ள, அவர்களின் துறையில் வெற்றிப் பெறவும் என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை இன்று (23.12.2023) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 23ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 07ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
இச்சிறப்புமிகு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Page 1 of 6, showing 9 record(s) out of 48 total